Thursday, July 18, 2013

கவிஞர் வாலி மரணம்

திரைப்பட உலகில் சாதனை படைத்தவர் 15 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதிய
கவிஞர் வாலி மரணம்
சென்னையில் இன்று உடல் தகனம்
15 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதி திரைப்பட உலகில் சாதனை படைத்த கவிஞர் வாலி நேற்று மரணம் அடைந்தார். அவரது உடல் தகனம் சென்னையில் இன்று நடைபெறுகிறது.

சென்னை, ஜூலை.19-

தமிழ் திரை உலகில் புகழ்பெற்று விளங்கியவர் பாடலாசிரியர் கவிஞர் வாலி (வயது 82).

‘வாலிப கவிஞர்’ வாலி

திரைப்பட பாடல் ஆசிரியர் சிம்மாசனத்தில் கவிஞர் கண்ணதாசன் அமர்ந்து கோலோச்சிக் கொண்டிருந்த கால கட்டத்தில், அவருக்கு இணையாக சிம்மாசனமிட்டு அமர்ந்து, காலத்தால் அழிக்க முடியாத பல அற்புதமான பாடல்களை எழுதியவர் கவிஞர் வாலி.

காலத்திற்கு ஏற்ப இளமையான சிந்தனைகள் மூலம் பாடல்களை உருவாக்கி அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ் திரை உலகில் மாபெரும் சாதனையாளராக வலம் வந்து, ‘வாலிப கவிஞர்’ வாலி என்று பெயர் பெற்றவர் இவர்.

எம்.ஜி.ஆர்.-சிவாஜி ஆரம்பித்து ரஜினிகாந்த்-கமல்ஹாசன், விஜய்-அஜித்குமார் என தொடர்ந்து, இப்போதைய இளைய தலைமுறை நடிகர்களுக்கும் பாடல் எழுதி இருக்கிறார்.

15 ஆயிரம் பாடல்கள்

இவர் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை எழுதி இருக்கிறார். இது தவிர ஏராளமான தனிப்பாடல்களையும் எழுதி இருக்கிறார்.

எம்.ஜி.ஆருக்காக வாலி எழுதிய ‘நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்’, ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்’, ‘ஏன் என்ற கேள்வி கேட்காமல் இங்கு வாழ்க்கை இல்லை’, ‘நான் காற்று வாங்க போனேன்’, சிவாஜி கணேசனுக்காக எழுதிய ‘அந்த நாள் ஞாபகம்’, ‘மாதவி பொன் மயிலாள் தோகை விரித்தாள்’, ரஜினிகாந்துக்காக எழுதிய ‘அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே’, கமல்ஹாசனுக்காக எழுதிய ‘உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன்’ போன்ற பாடல்கள் கால வெள்ளத்தை தாண்டியும் கடந்து நிற்பவை.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

கவிஞர் வாலி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள கற்பகம் அவென்யூவில் வசித்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வாலிக்கு இதய நோய் ஏற்பட்டது. இதற்காக அவர், ‘பைபாஸ் ஆபரேஷன்’ செய்து கொண்டார். ஆபரேஷனுக்குப் பின், அவர் உடல் நலம் தேறினார். வழக்கம் போல் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதினார். பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசினார்.

கடந்த மாதம் அவருக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் சிகிச்சைக்காக அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் தொற்றும், சளிப்படலமும் ஏற்பட்டு இருப்பதை கண்டு பிடித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தார்கள். என்றாலும் அவருடைய உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

மரணம்

நேற்று முன்தினம் வாலியின் உடல் நிலை மிகவும் மோசமானது. அவருடைய இருதயத்தில் ஒரு வால்வுபழுதுபட்டதால், மூச்சு விடுவதற்கு மிகவும் சிரமப்பட்டார். உடனடியாக அவருக்கு ‘வெண்டிலேட்டர்’ பொருத்தப்பட்டு, செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது.

அவர் உயிரை காப்பாற்ற டாக்டர்கள் தீவிரமாக போராடினார்கள். என்றாலும் சிகிச்சை பலன் அளிக்காமல், நேற்று மாலை 5.10 மணிக்கு வாலி மரணம் அடைந்தார்.

திரையுலகபிரமுகர்கள் அஞ்சலி

பின்னர் அவருடைய உடல் ஆஸ்பத்திரியில் இருந்து ஆம்புலன்ஸ் வேன் மூலம் ராஜா அண்ணாமலைபுரம் கற்பகம் அவென்யூ முதல் தெருவில் உள்ள வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஏராளமான திரையுலக பிரமுகர்கள் நேரில் வந்து வாலியின் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

இன்று உடல் தகனம்

கவிஞர் வாலியின் இறுதிச்சடங்கு இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

பொதுமக்கள் அஞ்சலிக்கு பின் வாலியின் உடல் அவரது இல்லத்தில் இருந்து பெசன்ட் நகரில் உள்ள மின்சார மயானத்துக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது. அங்கு பிற்பகல் 3.30 மணி அளவில் உடல் தகனம் நடைபெறுகிறது.

No comments:

Post a Comment