Tuesday, October 1, 2013
Wednesday, August 21, 2013
Saturday, August 17, 2013
Thursday, July 18, 2013
கவிஞர் வாலி வாழ்க்கை குறிப்பு
கவிஞர் வாலி வாழ்க்கை குறிப்பு
எம்.ஜி.ஆரின் புகழ்மிக்க பாடல்கள் பலவற்றை எழுதியவர் கவிஞர் வாலி. ஓவிய ஆசிரியராக இருந்து நாடக துறைக்கு சென்று பின்னர் அங்கிருந்து சினிமாவுக்கு வந்து தனது அற்புதமான பாடல்கள் மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்களை மகிழ்வித்தவர் வாலி.
நாடகங்கள்
திரைப்பட பாடலாசிரியர், எழுத்தாளர், நடிகர் என பன்முகங்களை கொண்ட கவிஞர் வாலியின் இயற்பெயர் டி.எஸ்.ரங்கராஜன். இவர் கடந்த 1931-ம் ஆண்டு அக்டோபர் 29-ந் தேதி ஸ்ரீரங்கத்தில் பிறந்தார். இவரது தந்தை பெயர் சீனிவாச அய்யங்கார். தயார் பெயர் பொன்னம்மாள்.
எஸ்.எஸ்.எல்.சி. படித்த பிறகு சென்னை ஓவிய கல்லூரியில் சேர்ந்து ஒரு வருடம் படித்தார். ஸ்ரீரங்கத்தில் இருந்த போது ‘நேதாஜி’ என்ற பெயரில் கையெழுத்து பத்திரிகை நடத்தி இருக்கிறார்.
சிறு வயதிலேயே கவிதை, நாடகங்கள் எழுதுவதில் வாலிக்கு அலாதி பிரியம். திரைப்பட துறைக்கு வருவதற்கு முன்பு திருச்சி அகில இந்திய வானொலியில் இவரது நாடகங்கள் ஒலிபரப்பாகி இருக்கின்றன.
டி.எம்.சவுந்தரராஜன்
வாலியை சினிமாவுக்கு பாட்டெழுத அழைத்து வந்தவர், சமீபத்தில் மறைந்த பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன். ஸ்ரீரங்கத்தில் இருக்கும் போது, ‘‘கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்’’ என்ற பாடலை ஒரு தபால் அட்டையில் எழுதி டி.எம்.சவுந்தரராஜனுக்கு அனுப்பி வைத்தார். அந்த பாடல் பின்னர் டி.எம்.சவுந்தரராஜனின் இனிமையான குரலில் பரவசப்படுத்தியது.
டி.எம்.சவுந்தரராஜனுடன் ஏற்பட்ட பழக்கத்தை தொடர்ந்து சென்னைக்கு வந்த அவர் சினிமாவில் பாட்டு எழுத தொடங்கினார்.
எம்.ஜி.ஆருக்காக எழுதியவர்
காதல், தாலாட்டு, வீரம், தத்துவம், சோகம், பாசம், குறும்பு, கேலி, கிண்டல், விரக்தி, பக்தி என எல்லா வகையான பாடல்களையும் வாலி எழுதி இருக்கிறார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன் காலத்தில் இருந்து, பின்னர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத் என தொடர்ந்து இப்போதுள்ள புதுமுக நடிகர்களுக்கும் அவர் பாடல்கள் எழுதி இருக்கிறார். திரை உலகில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி உள்ளார்.
எம்.ஜி.ஆரின் பெரும்பாலான படங்களுக்கு வாலி பாடல் எழுதி இருக்கிறார். எம்.ஜி.ஆருக்காக ‘படகோட்டி’ படத்தில் இவர் எழுதிய அத்தனை பாடல்களும் பிரபலம். ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘எங்க வீட்டுப்பிள்ளை’, ‘எங்கள் தங்கம்’, ‘ரிக்ஷாக்காரன்’ என எம்.ஜி.ஆரின் எல்லா வெற்றிப்படங்களுக்கும் பாடல்கள் எழுதி இருக்கிறார். எம்.ஜி.ஆரின் கொள்கைகளை விளக்கும் கருத்துக்களை பாடல்களில் அற்புதமாக சேர்த்து அவருடைய பேரன்பை பெற்றவர்.
புத்தகங்கள்
‘கலியுக கண்ணன்’, ‘கடவுள் அமைத்த மேடை’, ‘ஒரு செடியில் இரு மலர்கள்’, ‘சிட்டுக்குருவி’, ‘ஒரேயொரு கிராமத்தில்’, ’சாட்டை இல்லாத பம்பரங்கள்’ உள்பட 17 திரைப்படங்களுக்கு வாலி திரைக்கதை வசனம் எழுதி இருக்கிறார். மாருதி ராவுடன் சேர்ந்து ‘வடைமாலை’ என்ற படத்தை இயக்கி உள்ளார்.
சிறுகதை, கவிதை, உரைநடை என 20-க்கும் மேற்பட்ட புத்தகங்களை கவிஞர் வாலி எழுதி இருக்கிறார். அவற்றுள் அவதார புருஷன், பாண்டவர் பூமி, ராமானுஜ காவியம், கிருஷ்ண விஜயம், நிஜ கோவிந்தம், அம்மா ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
இயக்குனர் கே.பாலசந்தரின் ‘பொய்க்கால் குதிரை’, மற்றும் ‘ஹே ராம்’ மற்றும் ‘சத்யா’, ‘பார்த்தாலே பரவசம்’ ஆகிய படங்களில் நடித்து உள்ளார்.
விருதுகள்
வாலி 5 முறை சிறந்த திரைப்பட பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதை பெற்று இருக்கிறார். 1 எங்கள் தங்கம் (1970), இவர்கள் இப்படித்தான் (1979), வருஷம் 16, அபூர்வ சகோதரர்கள் (1989), கேளடி கண்மணி (1990), தசாவதாரம் (2008) ஆகிய படங்களில் எழுதிய பாடல்களுக்காக அவருக்கு தமிழக அரசு விருது வழங்கி கவுரவித்தது.
கடந்த 2007-ம் அண்டு மத்திய அரசு வாலிக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கவுரவித்தது.
குடும்பம்
வாலியின் மனைவி பெயர் ரமண திலகம். வாலி இவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ரமண திலகம் ஏற்கனவே மரணம் அடைந்து விட்டார். வாலி-ரமண திலகம் தம்பதிக்கு பாலாஜி என்ற ஒரே ஒரு மகன் மட்டும் இருக்கிறரார்
கவிஞர் வாலி மரணம்
திரைப்பட உலகில் சாதனை படைத்தவர் 15 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதிய
கவிஞர் வாலி மரணம்
சென்னையில் இன்று உடல் தகனம்
15 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதி திரைப்பட உலகில் சாதனை படைத்த கவிஞர் வாலி நேற்று மரணம் அடைந்தார். அவரது உடல் தகனம் சென்னையில் இன்று நடைபெறுகிறது.சென்னை, ஜூலை.19-
தமிழ் திரை உலகில் புகழ்பெற்று விளங்கியவர் பாடலாசிரியர் கவிஞர் வாலி (வயது 82).
‘வாலிப கவிஞர்’ வாலி
திரைப்பட பாடல் ஆசிரியர் சிம்மாசனத்தில் கவிஞர் கண்ணதாசன் அமர்ந்து கோலோச்சிக் கொண்டிருந்த கால கட்டத்தில், அவருக்கு இணையாக சிம்மாசனமிட்டு அமர்ந்து, காலத்தால் அழிக்க முடியாத பல அற்புதமான பாடல்களை எழுதியவர் கவிஞர் வாலி.
காலத்திற்கு ஏற்ப இளமையான சிந்தனைகள் மூலம் பாடல்களை உருவாக்கி அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ் திரை உலகில் மாபெரும் சாதனையாளராக வலம் வந்து, ‘வாலிப கவிஞர்’ வாலி என்று பெயர் பெற்றவர் இவர்.
எம்.ஜி.ஆர்.-சிவாஜி ஆரம்பித்து ரஜினிகாந்த்-கமல்ஹாசன், விஜய்-அஜித்குமார் என தொடர்ந்து, இப்போதைய இளைய தலைமுறை நடிகர்களுக்கும் பாடல் எழுதி இருக்கிறார்.
15 ஆயிரம் பாடல்கள்
இவர் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை எழுதி இருக்கிறார். இது தவிர ஏராளமான தனிப்பாடல்களையும் எழுதி இருக்கிறார்.
எம்.ஜி.ஆருக்காக வாலி எழுதிய ‘நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்’, ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்’, ‘ஏன் என்ற கேள்வி கேட்காமல் இங்கு வாழ்க்கை இல்லை’, ‘நான் காற்று வாங்க போனேன்’, சிவாஜி கணேசனுக்காக எழுதிய ‘அந்த நாள் ஞாபகம்’, ‘மாதவி பொன் மயிலாள் தோகை விரித்தாள்’, ரஜினிகாந்துக்காக எழுதிய ‘அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே’, கமல்ஹாசனுக்காக எழுதிய ‘உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன்’ போன்ற பாடல்கள் கால வெள்ளத்தை தாண்டியும் கடந்து நிற்பவை.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை
கவிஞர் வாலி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள கற்பகம் அவென்யூவில் வசித்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வாலிக்கு இதய நோய் ஏற்பட்டது. இதற்காக அவர், ‘பைபாஸ் ஆபரேஷன்’ செய்து கொண்டார். ஆபரேஷனுக்குப் பின், அவர் உடல் நலம் தேறினார். வழக்கம் போல் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதினார். பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசினார்.
கடந்த மாதம் அவருக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் சிகிச்சைக்காக அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் தொற்றும், சளிப்படலமும் ஏற்பட்டு இருப்பதை கண்டு பிடித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தார்கள். என்றாலும் அவருடைய உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
மரணம்
நேற்று முன்தினம் வாலியின் உடல் நிலை மிகவும் மோசமானது. அவருடைய இருதயத்தில் ஒரு வால்வுபழுதுபட்டதால், மூச்சு விடுவதற்கு மிகவும் சிரமப்பட்டார். உடனடியாக அவருக்கு ‘வெண்டிலேட்டர்’ பொருத்தப்பட்டு, செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது.
அவர் உயிரை காப்பாற்ற டாக்டர்கள் தீவிரமாக போராடினார்கள். என்றாலும் சிகிச்சை பலன் அளிக்காமல், நேற்று மாலை 5.10 மணிக்கு வாலி மரணம் அடைந்தார்.
திரையுலகபிரமுகர்கள் அஞ்சலி
பின்னர் அவருடைய உடல் ஆஸ்பத்திரியில் இருந்து ஆம்புலன்ஸ் வேன் மூலம் ராஜா அண்ணாமலைபுரம் கற்பகம் அவென்யூ முதல் தெருவில் உள்ள வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஏராளமான திரையுலக பிரமுகர்கள் நேரில் வந்து வாலியின் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
இன்று உடல் தகனம்
கவிஞர் வாலியின் இறுதிச்சடங்கு இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
பொதுமக்கள் அஞ்சலிக்கு பின் வாலியின் உடல் அவரது இல்லத்தில் இருந்து பெசன்ட் நகரில் உள்ள மின்சார மயானத்துக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது. அங்கு பிற்பகல் 3.30 மணி அளவில் உடல் தகனம் நடைபெறுகிறது.
Friday, April 12, 2013
Saturday, March 9, 2013
Subscribe to:
Posts (Atom)